திங்கள், 13 ஏப்ரல், 2009

தூத்துக்குடியில் இலங்கை பிரச்சினை குறித்த டிவிடிக்கள் காவற்துறை தடையை மீறி விநியோகம்:

தூத்துக்குடியில் காவற்துறை தடையை மீறி பெரியார் தி.க.வினர் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு ஆதரவான டிவிடிகளை விநியோகித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், இயக்குநர் சீமானின் பேச்சுக்கள், கொழுவை நல்லூர் முத்துக்குமரனின் இறுதி நிமிடங்கள் மற்றும் தமிழர்களுக்கு ஆதரவான கவிதைகள் கொண்ட டிவி டியை தயாரித்து, அதனை வெளியிடப் போவதாக அறிவித்தது.
இதனை வெளியிட காவல்துறை அனுமதிக்கவில்லை. இருப்பினும் அதனை மக்கள் மத்தியில் எப்படியாவது சேர்த்துவிடும் முயற்சியில் பெரியார் கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் அந்த டிவிடியின் ஒரு இலட்சத்திற்கும் மேற் பட்ட பிரதிகளை ஏற்கனவே தமிழகம் முழு வதும் வியோகித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உளவுத்துறையினர் மற்றும் காவற்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் அந்த குறிப்பிட்ட டிவிடிகள் இரகசியமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், மார்க்கெட், டீக்கடைகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வந்து இந்த குறிப்பிட்ட டிவிடிகளை யாரும் அறியாதவகையில் பைக்குகள் மீதும், கார்கள் மீதும், உடமைகள் மீதும் போட்டு விட்டு செல்கின்றனர்.
முத்திரைகளோ அல்லது முகவரிகளோ இல்லாத இந்த டிவிடிகளின் கவரில் ஒரு கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த டிவிடி உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியது. பலரின் வாழ்வில் ஒளியற்றக்கூடியது. நமது எதிரிகளை அடையாளம் காட்டுவது. ஆகவே கட்டாயம் பாருங்கள். தெரிந்தவர்களுக்கு பிரதி எடுத்துக் கொடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மொத்தம் 3 வீடியோ பைல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றில் இயக்குநர் சீமான் பேச்சின் முழு பதிவும், மற்றொன்றில் இலங்கை தமிழர்கள் சிலர் பேட்டியும் இடம்பெற்றுள்ளன.
தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த டிவிடிகள் காவற்துறை தடையை மீறி விநியோகிக்கபட்டு வருவதால் தூத்துக்குடி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக