திங்கள், 9 மார்ச், 2009

வன்னி மக்களை காப்பாற்றுங்கள் : உலக நாடுகளிடம் த.தே.கூ. கோரிக்கை

சிறிலங்க‌ப் படையினரின் கோர எறிகணை, பீரங்கித் தாக்குதல்களில் இருந்து உடனடியாக வன்னி மக்களை காப்பாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு உலக நாடுகளிடம் நான்கு கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 2,150 பேர் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 5,000 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 பேர் வரை கொல்லப்படுவதாகவும் கூட்டமைப்பின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதி தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10-15 தடவை இடம்பெயர்ந்து இருப்பிடம் இன்றி மர நிழல்களிலும் காடுகளுக்குள்ளும் வாழ்ந்து வருகின்றனர்.படையினரின் இடைவிடாத எறிகணை, பீரங்கித் தாக்குதல்களுக்கு அஞ்சி கடந்த இண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். 3,30,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், அரசு 70 ஆயிரம் மக்கள் மாத்திரமே வன்னிக்குள் இடம்பெயர்ந்திருப்பதாக கூறுகின்றது.அரசு பொய்ப் பிரசாரங்களை செய்து வருகின்றது. உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை என்றும் அமைச்சர்கள் கூறுகின்றனர். இங்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் எதுவும் இல்லாத நிலையில் அரசு உண்மைக்கு மாறான தகவல்களை கூறுகின்றது.புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளதாக கூறிய போதும் அவை ஒரு தனி நபருக்கு கூட போதுமானவை அல்ல. மிகவும் குறைந்தளவிலான பொருட்களே இங்கு அனுப்பப்படுகின்றன.வன்னியில் உள்ள மருத்துவமனைகள் எல்லாம் படையினரின் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன. மாத்தளன் மருத்துவமளை இயங்குகின்றது. அதுவும் சத்திர சிகிச்சை வசதிகள், வெளிநோயாளர் வசதிகள், மருந்துகள், மருத்துவர்கள் என எதுவு‌ம் இல்லாத நிலையில் இயங்குகின்றது.எந்தவித வசதிகளும் இன்றி தற்காலிகமாக புதுமாத்தளன் பகுதியில் மருத்துவமனை ஒன்று இயங்குகின்றது. அதனை நம்பித்தான் 3,30,000 மக்கள் வன்னியில் வாழ்கின்றனர்.ஆகவே, நான்கு கோரிக்கைகளை அனைத்துலக நாடுகளின் கவனத்திற்கு உடனடியாக முன்வைக்கின்றோம்.- மனித அவலங்களை தடுத்து மக்களை காப்பாற்றுவதற்கு அனைத்துலக நாடுகள் போரை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 3,30,000 மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். அத்துடன், மக்கள் தங்கியிருப்பதற்கான கூடாரங்கள் வழங்கப்பட வேண்டும்.- ஜக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர் குழுவும் மற்றும் அனைத்துலக மனித நேய அமைப்புக்களும் மக்களுடன் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.- பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு உள்ளுர், அனைத்துலக ஊடகங்கள் சென்று உண்மை நிலைமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இடமளிக்கப்பட வேண்டும்.ஆகிய நான்கு கோரிக்கைகள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.அனைத்துலக நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையானால் பெரும் மனித அவலங்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க தவறிவிட்டீர்கள் என்றுதான் கருத வேண்டிய நிலை ஏற்படும் என மிகவும் உருக்கமாக அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

ஈழ அரசியல் தமிழகத்தில்..

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. மகளிர் சங்கம் உண்ணாவிரதம்
ஈழ‌த் ‌த‌மிழ‌ர்களு‌க்காக ச‌ர்வ க‌ட்‌சிகளு‌ம் இணை‌ந்து குர‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் : சர‌த்குமா‌ர்
இலங்கை தமிழர்களின் உரிமை குரலை ஆதரிக்கிறோம் : ஜெயலலிதா
ஈழத் தமிழர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு உண்மையான அக்கறை இல்லை : ஜெயல‌லிதா
இலங்கைத் தமிழர்களுக்காக அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா இரு‌க்கு‌ம் உண்ணாவிரதம், நாடு தழுவிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
போர் நிறுத்தம் தேவை: தா.பா‌ண்டிய‌ன்
இலங்கைத் தமிழர் படுகொலைக்கு கருணாநிதியே பொறுப்பு : வைகோ குற்றச்சாற்று
இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக ரூ. 1 கோடி - ஜெ.

இலங்கைக்கு மருத்துவ குழுவை அனுப்புவது ஏமாற்று வேலை : பழ.நெடுமாறன்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக, இந்திய மருத்துவ குழுவை அனுப்புவது ஏமாற்று வேலை என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக இந்தியாவிடம் இருந்து 52 பேர்களைக் கொண்ட இந்திய ராணுவ மருத்துவ குழு செல்ல இருக்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இலங்கையின் வடக்கு மாநிலத்தில் உள்ள கடலோர பகுதியில் அமைந்திருக்கும் புல்மோடை என்ற இடத்தில் மருத்துவமனை அமைத்து அங்கிருந்து மருத்துவ உதவி செய்யப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையில் முள்ளியவளை, வள்ளிப்புனம், விசுவமேடு, உடையார்கட்டு, மல்லாவி, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இருந்த மருத்துவமனைகளை சிங்கள ராணுவம் தாக்கி அழித்துள்ளது. ஏராளமான நோயாளிகளும், மருத்துவத்துறையை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இருந்த மருத்துவமனைகளை அழித்த நிலையில் சிங்கள ராணுவத்தின் பாதுகாப்புடன் இயங்கும் இந்திய மருத்துவமனைக்கு தமிழர்கள் யாரும் வரமாட்டார்கள். அவ்வாறு வருவது அவர்களின் உயிர்களுக்கு அபாயத்தை விளைவிக்கும்.நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையின் காரணமாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு இத்தகைய அறி‌விப்புகளை இந்திய அரசு வெளியிடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி செய்ய இந்தியா விரும்பினால், செஞ்சிலுவை சங்கம் அங்கு செயல்படுவதற்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.செஞ்சிலுவை சங்கத்தினர் வெளியேற்றப்பட்டதையோ, மருத்துவமனைகள் அழிக்கப்பட்டதையோ இதுவரை கண்டிக்காத இந்திய அரசு இப்போது மருத்துவ உதவி செய்யப்போவதாக நாடகம் ஆடுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் எ‌ன்று பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சனி, 7 மார்ச், 2009

இன்றைய‌இறுதிச்ச‌ட‌ங்குக‌ளை இறுதிச்ச‌ட‌ல‌ங்க‌ளாக்குவோம்...



போதும்
இழந்தது போதும்
இழந்து கொண்டிருப்பது
வாழ்க்கையை மட்டுமல்ல
வசந்தமுள்ள வரலாற்றையும்தான் ....!

சிங்களத்து சிப்பாய்களே
நீங்கள் வீரர்கள் அல்ல
வெறியூட்டப்பட்ட வீணடிமைகள்
இது
உங்களது உணர்வுப்போரல்ல
உரிமைப் போரல்ல
இலட்சியப் போருமல்ல
சில
சிங்கள சீரழிப்பாளர்களின்
சினத்தின் கணத்தால்
நடக்கும் தூண்டுதல் போர் ....!
ஏக காலமாய்
எங்கள் உணர்வுகளை
காரி உமிழ்கிறோம்
உமிழ்நீராய் மட்டுமே
அது
உணர்வுநீராய் மாறி
உருவெடுக்கும் முன்
விழித்துக்கொள்ளுங்கள்....!
இது
எதிரிக்கான எச்சரிக்கை ....!

எமது அரசின் நிலையோ
அவமானப்படத்தக்கது
அண்டைவீட்டுத் தமிழனுக்கு
அமைதிபேச்சுவார்த்தையாம்....!
எதிர்வீட்டு சிங்களனுக்கு
ஏவுகணை சப்ளையாம்....!

ஒரு உயிர்ப்படுகொலையை காட்டி
ஓராயிரம் இனப்படுகொலை ....!

அதிகார அக்னிச்சிறகுகளின் கையில்
அப்பாவித் தமிழர்கள்
தடுக்கவேண்டிய தலைமைகள்
தள்ளாடுது மருத்துவமனையில் ....!

சொற்போரில் சொல்லாயுதம் ஏந்தி
சோர்வடைந்த எம் தமிழன்
உயிராயுதம் ஏந்தி
உலகையே விழிக்கச் செய்த
எம் முத்துகுமரன்
திரும்பி வருவானேயானால்
வெற்றிகளையும் வியர்வைகளையும்விட
வேதனைகளே அதிகம் ....!

இறந்த கொள்கையை மறந்து
இளம் நாடார் என பறை சாற்றிய
சாதிச்சங்கங்களுக்கு எமது சவுக்கடிகள் ....!

சிதைந்த உடல்களும்
புதைந்த சடலங்களும்
திரும்பி வருமேயானால்
இருவரை ஏளனமாய் பார்க்கும்
ஒருவன்
சிங்களன்-எதிரியாக
மற்றொருவன்
இந்தியன்-துரோகியாக ....!

இலட்சங்களில் உயிர்களை இழந்தும்
இலட்சியத்தை கைவிடாத
எம் வீரத்தமிழர்களுக்கு வீரவணக்கங்கள் ....!

எம் உணர்வுகளால்
நடக்கும் இவ்வறப்போர்
ஆயுதப்போரை வென்றெடுக்கும்
வெற்றியின் தூண்டுகோல்....!

சிதைக்கப்பட்டவை
உடல்களும் உரிமைகளையும் மாத்திரமல்ல
உணர்வுகளையும்தான் ....!

பிணக்குவியலில் கூட
பீரங்கித் தாக்குதல் நடத்துகிறாயே
நீயென்ன பிறவியின் பிதற்றல்களா....?

திரும்பிய இடமெல்லாம்
கூக்குரல்
"மனித நேயத்தை மசிக்கும்
மகா எமனை மண்டியிடவைத்து
மக்களை காப்பாற்ற உதவிசெய்"
சொல்லும்முன்னே உதவியது எமதரசு
சிதைக்கப்பட்ட மக்களுக்கல்ல
சிங்கள வெறிநாய்களுக்கு ....!

முத்துகுமரன்
இறக்கவில்லை இறக்கடிக்கப்பட்டிருக்கிறான்
உணர்வுகளால்
அவனுக்கான அஞ்சலி
இலட்சங்களில் கொடையல்ல
இலட்சிய கேள்விகளுக்கான விடை
தருமா இவ்வரசு ....?

அடுத்தவன் மனைவியை
அபகரிக்க ஆயுதசப்ளை
இந்தியா ஒளிர்கிறது...!
இதுவும்
சனநாயக நாட்டின் சாதனைகளே ....!

புழுதியில் புரண்டோடி விளையாடுமென
எதிர்பார்த்த எம்மகவு மடிந்தது
கருவறையே கல்லறையாய் ....!

மருத்துவமனையை கூட
மண்டையோட்டுத் தலமாக்கிய
மரண எமன்கள் ....!

பிஸ்டல்களின் பசிக்கு
பிஞ்சுகளை இறையாக்கிய
பிணந்தின்னி கழுகுகள் ....!

உணர்வுகளின் முழக்கம்
ஊரெங்கும் ஒலித்துவிட்டது
விடிவுகாலம் ஒன்றும்

வெகு தொலைவிலில்லை
வீணர்கள் வீழ்த்தப்படுவார்கள்
வீரர்கள் வெற்றி வாகை சூடுவர்

நாளைய விடிவு
உணர்வு நெஞ்சங்களின்
உரிமை விடியலாக விடியட்டும் ....!

எண்ணக்குமுறல்களை எடுத்துரைக்க
ஆகாயம் காகிதமானால்கூட
அடங்காது ஆதங்கம் ....!

இவண்
உணர்வுகளின் ஓசை(உயிருள்ளவரை ஒலிக்கும்)...........................
ஜெ.இ.பிரேம்குமார்,கப்பிகுளம்.

செவ்வாய், 3 மார்ச், 2009

வாழ்க பாரதம். வளர்க இந்தியர்

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல்:
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் (தமிழர்களால் ஓட்டுப்போட்டு தமிழ்நாட்டில் இருந்து போன தமிழன்) கூறியிருப்பதாவது:
இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் கண்டனத்திற்குரியது. பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.
மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி (நம்ம கலைஞர் படத்தின் கதாநாயகன்தான்): இது முரட்டுத்தனமான தாக்குதல். பயங்கரவாதத்தின் ஆணிவேர் அறுக்கப்பட வேண்டும். இனிமேலாவது சர்வதேச நாடுகள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலே கண்டது செய்தி:
இவர்கள் கண்டனம் வரவேற்க கூடியதுதான். யாருடைய நிர்பந்தமும் இல்லாமல், அரசின் குரலாக ஒலிக்கும் இவர்கள் குரல், ஏன் ஈழமக்கள் சாகும்போது அதிர்ச்சி வரவில்லை?. ராஜபக்ஸே கொன்று குவிப்பது முரட்டுத்தனம் இல்லையா?. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும். இலங்கையை வாழ்த்த வேண்டுமா?. சிங்களவன் தமிழனுக்கு எதிரியல்ல. ஆனால் இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள வெறியர்களை கண்டிக்காத இந்திய அரசு வரிந்து கட்டிக் கொண்டு இலங்கை வீரர்களுக்கு பாதுகாப்பு கொடு என்கின்றது. இத்தனைக்கும் ஒருவன் கூட சாகவில்லை. எம்மக்கள் அழிகின்றார்கள் என்று குரல் கொடுத்தால் சிறைவாசம். இந்திய அரசின் கபட நாடகத்தை புட்டு வைத்தால் பிரிவினை வாதம். நாமெல்லாம் இந்தியர்கள். இந்தியா சனநாயக நாடு. வாழ்க பாரதம். வளர்க இந்தியர். அப்போ நாம? ...... ...
செ. இ. பிரபாகரன், குடிமக்கள் சனநாயகம், தூத்துக்குடி
வன்கொடுமை


தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா ஆறாம்பண்ணை கிராமம். இஸ்லாமியர், தேவர் மற்றும் பள்ளர் வாழ்ந்து வருகின்றனர். வல்லநாடு முதல் திருவைகுண்டம் வரை அனந்தனம்பிகுரிச்சி, மணக்கரை, தோழப்பந்பண்ணை என தேவர் மட்டுமே உள்ள கிராமங்கள் அருகிலுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஆறாம்பண்ணை கிராமத்தின் கருப்பசாமி(தேவர்) என்பவர் தற்கொலை செய்து கொள்கின்றார். இதற்கு காரணம் கருப்பசாமி வீட்டில் வேலை செய்து வந்த மாரியப்பன்(பள்ளர்) தான் காரணம் என்ற குற்றச்சாட்டினை அவ்வூரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மூக்காண்டி(தேவர்) மற்றும் பலர் கூறுகின்றனர். அதுவும் ஆதிக்க சக்திகள் நிறைந்த அந்த ஊரில் மாரியப்பன் கருப்பசாமியின் மனைவியுடன் தொடர்பு வைத்துதான்?? காரணம் என்றனர். (மாரியப்பன் பார்க்கவே பரிதாபமாக உள்ளார்) அத்தோடு மாரியப்பனின் வீட்டைப் பூட்டி சாவியை வைத்துக் கொண்டனர். மாரியப்பன் ஊரைக் காலி செய்து விடுகின்றார். விடவில்லை ஆதிக்க சக்திகள் மாரியப்பனின் உறவினர்களை ஆறாம்பண்ணையினை விட்டு காலி செய்து அருகிலுள்ள அராபத்நகர் என்ற காலனியில் குடியேற வைத்துள்ளனர். மாரியப்பனின் விவசாய நிலங்களை சகோதரர்கள் ராமர்(பள்ளர்), கண்ணன்(பள்ளர்) ஆகியோர் விவசாயம் செய்துள்ளனர். வீட்டைப் பிடுங்கிய கும்பல் விவசாய நிலத்தினையும் கேட்டு அடித்து மிரட்டி, வீட்டின் ஓடுகளை உடைக்க, ராமர்(பள்ளர்) புகாரின் பேரில் மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்) ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். 2004 ல் கொடுத்த புகாருக்கு 2008 ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்) இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜாமீனில் வெளி வந்த மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்), ராஜா(தேவர்), முருகன்(தேவர்), பெருமாள்(தேவர்), ராமசாமி(தேவர்) ஆகியோர் சேர்ந்து கடந்த 15 தேதி செவ்வாய்கிழைமை மாலை 3.30 மணியளவில் ஆறாம்பண்ணையிலிருந்து எல்.கே.ஜி. படிக்கும் தனது மூண்றரை வயது மகனை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது கண்ணன் (பள்ளர்)(வயது 34 த/பெ சுப்பிரமணியன் ) என்ற முக்கிய சாட்சியினை ' எங்களுக்கு எதிரா கம்ளைன்ட் கொடுக்க துணிஞ்சிட்டிங்கலடா ' என்று அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். வெட்டுப்பட்ட கண்ணன் உடலை? காவல்துறை கைப்பற்றி முறப்பநாடு காவல்நிலையத்தில் இரவு 11 மணி வரை வைத்துவிட்டு பின்னர் அவசர, அவசரமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு ஒரே விடிவு சட்டம் என்று இருந்தவர்களுக்கு இந்த 'ஆதிக்க சக்திகளின் சட்டம்' கொடுத்த பதிலடி "கொலை". இருந்த பத்து வீட்டினையும் காலி செய்து உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர் மக்கள். இஸ்லாமிய சகோதரர்கள் ஆதரவுடன்தான் கண்ணன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கண்ணன் செய்த தவறு நீதிமன்றத்தில் உண்மையைச் சொன்னது மட்டும்தான். மும்பை குண்டு வெடிப்பில் பலியான 200 இந்தியர்களுக்குக்காக இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க தயாராகின்றது. இலங்கையில் இனமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு தமிழகம் ஒருசேர குரல் கொடுக்கின்றது. ஆனால், சாதியின் பெயரால் ஆதிக்க சக்திகளால் அன்றாடம் கொள்ளப்படும் இவர்களும் தமிழர்கள்தானே?..... இந்தியர்கள்தானே?...... மனிதர்கள்தானே?...... வன்கொடுமை மற்றும் தீண்டாமை தடுப்புச் சட்டம் பதிவு செய்வது அரிது, தண்டனை கொடுப்பது அதனினும் அரிது, தண்டித்தால் உயிர் பறிக்கும் கொடூரம். அப்படியெனில் அடித்தால் அடிபட வேண்டுமா?.. மானமும், மாண்பும் யாருக்கு?. .. (குறிப்பு : காவல்துறை மூக்காண்டி, ராஜா, ராமசாமி ஆகியோர் மீது மட்டும் வழக்கு பதிந்துள்ளது. இக்கிராம மக்களின் கோரிக்கைகள்

1. இறந்தவரின் குடும்பத்திற்கு சட்டத்தின் படி ரூபாய் ஐந்து லட்சமும், அரசு வேலையும் உடனே வழங்க வேண்டும்.

2. போலீஸ் பாதுகாப்பு வேண்டும்.

3. குறிப்பிட்ட சாதியினைச் சேர்ந்த காவலர்கள் அதிகம் உள்ள முறப்பநாடு காவல் நிலையத்தில் பணி மாற்றம் நடைபெற வீண்டும்.

4. கருங்குளம் - செய்துங்கநல்லூர் பாலம் கடடித்தந்தால் பாதுகாப்பாக வெளியூர் செல்ல முடியும்.


ஜெ.இ.பிரபாகரன், 09486251948குடிமக்கள் சனநாயகம், தூத்துக்குடி.
இணைப்பு:
1 & 2 : டிசம்பர் 17 காலை மக்கள் உரிமை குழு வழக்கறிஞர் அதிசயகுமார், பெரியார் திராவிடர் கழகம் பால்பிரபாகரன், மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ராமசந்திரன் ஆகியோர் கிராம மக்களோடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதுகாப்பு மற்றும் நீதி கேட்டபோது எடுத்த படங்கள். 3 : மக்கள் உரிமை குழு வழக்கறிஞர் அதிசயகுமார், மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ராமசந்திரன் ஆகியோர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல் கண்காணிப்பாளரோடு கோரிக்கை குறித்து பேசிய காட்சி. பத்திரிக்கை செய்திகள் பார்க்க: http://district.dinamalar.com/districtnews_main.asp?ncat=Thoothukudi&ncat_ta=தூத்துக்குடி#117549
More information please contact: Inspector of police, Murappanadu police station : 04630 261229Deputy superident of police(Mr.Natarajamoorthy), Srvaikundam : 04630 255236, 9442964222Superident of police (Mr. Deepak.M.Daamor) : 0461 2340200, 9442154900District collector (Mr. Palaniyandi) : 0461 2340600, 9443987802, 944418000, 9443342544DIG Thirunelveli : 0462 2568031Chief minister and Police minister : 044 28111101, 9940300087