வெள்ளி, 30 அக்டோபர், 2009

மனித உரிமையை நிலைநாட்டிய நீதிமன்றம்

போலீஸ் உயர் அதிகாரிகள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை : போலீஸ் - வக்கீல் மோதல் சம்பவத்தில் ஐகோர்ட் தீர்ப்பு
அக்டோபர் 30,2009,00:00 IST

சென்னை : "ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவத்திற்கு முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணி, முன்னாள் துணை கமிஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் காரணம். இவர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நியாயமான விசாரணை நடத்த ஏதுவாக, இவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதற்கு, அரசு தனது தனிப்பட்ட முடிவை செயல்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும், இந்த போலீஸ் அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு, நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப் பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி, ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தானாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்கையும் எடுத்தது. தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வக்கீல் சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க, நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதியை, ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே நியமித்தார். இந்த வழக்கில் 20 நாட்களாக விசாரணை நடந்தது.

வக்கீல்கள் சங்கங்கள் சார்பில் சீனியர் வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பால் கனகராஜ், பிரபாகரன், என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை, பிரசன்னா, வேல்முருகன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலரும், அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல், போலீஸ் சார்பில் டில்லி சீனியர் வக்கீல் ராஜிவ் தவான், சி.பி.ஐ., தரப்பில் வக்கீல் சந்திரசேகரன், ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் சார்பில் சீனியர் வக்கீல் முத்துகுமாரசாமி ஆஜராகினர்.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவை, தமிழக அரசு பின்பற்றும் என அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

* இந்த உத்தரவில் குறிப்பிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு நியமித்த ஒரு நபர் கமிஷன் (சுந்தரதேவன் கமிஷன்) தொடர வேண்டுமா, இல்லையா என்பதை பரிசீலனை செய்ய வேண்டியது, அரசைப் பொறுத்தது.

* கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவத்துக்கும், போலீஸ் நிலை உத்தரவு உள்ளிட்ட சட்ட விதிகளை மீறியதற்கும், முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முன்னாள் இணை கமிஷனர் (வடக்கு) ராமசுப்ரமணி, பூக்கடை முன்னாள் துணை கமிஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் பொறுப்பு.

* இந்த நான்கு அதிகாரிகள் மீதும் தமிழக அரசு சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடக்க ஏதுவாக, ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும் வரை இந்த நான்கு அதிகாரிகளையும் தற்காலிக பணி நீக்கம் செய்வதற்கு, அரசு தனது தனிப்பட்ட முடிவை செயல்படுத்துவது முறையாக இருக்கும்.

* பிப்ரவரி 19ம் தேதி, ஐகோர்ட் வளாகத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அத்துமீறல் செய்ததாக இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வக்கீல்கள், போலீசாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சட்டப்படி புலன் விசாரணையை சி.பி.ஐ., நடத்தலாம். இந்த வழக்குகளில் சி.பி.ஐ., புலன் விசாரணையை நடத்தி, மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

* நீதி நிர்வாகத்தில் இடையூறு ஏற்படுத்தியதற்காக அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், விஸ்வநாதன், ராமசுப்ரமணி, பிரேமானந்த் சின்கா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு ஆரம்ப முகாந்திரம் உள்ளது. எனவே, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

* காயமடைந்த வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் மற்றும் சேதப்படுத்தப்பட்ட வக்கீல்கள் சங்க அலுவலகங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க, கூடுதலாக 58 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

508 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பு: பிற்பகல் 2.30 மணிக்கு முதலில் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, உத்தரவை வாசித்தார். அரை மணி நேரம் தீர்ப்பின் முக்கிய பக்கங்களை வாசித்தார். அதன் பின், நீதிபதி பானுமதி வாசித்தார். மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை இந்த உத்தரவை, நீதிபதிகள் இருவரும் வாசித்தனர். இந்த உத்தரவு 508 பக்கங்கள் அடங்கியதாக இருந்தது. தீர்ப்பை கேட்க கோர்ட் ஹாலுக்கு உள்ளேயும், வெளியிலும் வக்கீல்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். நீதிபதிகள் உத்தரவை வாசித்து விட்டு சென்ற பின், வக்கீல்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஐகோர்ட்டுக்கு வெளியில் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக