சனி, 12 டிசம்பர், 2009

மீனவர் பொது விசாரணை மன்றம்

தங்கச்சிமடத்தில் மீனவர் பொது விசாரணை மன்றம்

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நடந்த மீனவர் பொது விசாரணை மன்றத்தில் முன்னாள் கவர்னர், தலைமை நீதிபதி முன் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்கள் குமுறல்களை தெரிவித்தனர்.

மீனவர் உரிமை மீறலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் பொது விசாரணை தீர்ப்பாயம் மற்றும் மீனவர் மாநாடு நடந்தது. நிரபராதி மீனவர் கூட்டமைப்பு பிரதிநிதி அருளானந்தம் தலைமை வகித்தார். சேதுபதி நாட்டார் மாநாடு கொடியேற்றினார்.இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டிற்கு பலியான மீனவர்களின் நினைவு தூணை ராஜேந்திர நாட்டார் திறந்து வைத்தார்.

இதில் பங்கேற்ற தமிழக மீன்வளத்துறை அமைச்சர் சாமி பேசுகையில்,""1983 லிருந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கி வருகிறது. தமிழக மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்சி பேதமில்லாமல் இணைந்து அனைவரும் செயலாற்ற வேண்டும்'' என்றார்.

ரித்திஷ்குமார் எம்.பி., ஹசன்அலி எம்.எல்.ஏ., மாவட்ட காங்., தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, முத்தரையர் மீனவர் சங்க தலைவர் செல்லத்துரை, பரவர் நலப்பேரவை தலைவர் சிப்பிசேசு, ஊராட்சி தலைவர் அருள் உட்பட பலர் பேசினர். இதை தொடர்ந்து மீனவர் பொது விசாரணை மன்றம் நடந்தது. கேரள முன்னாள் கவர்னர் சுகதேவ்சிங்கேங்க், முன்னாள் தலைமை நீதிபதி பார்கவா, காந்தி கிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட நாகபாண்டி(ராமேஸ்வரம்)முருகதாஸ்( பட்டுக்கோட்டை) குப்புசாமி (நாகப்பட்டினம்) தங்கச்சாமி(புதுக்கோட்டை) உட்பட14 மீனவர்கள் நடுக்கடலில் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மூன்று ஆண்டாக தலையில் துப்பாக்கி குண்டுடன் இருக்கும் காரைக்கால் மீனவர் சவுந்தர்ராஜ் பேசுகையில்,"" 2006 ல் நடுக்கடலில் இலங்கை கடற்படை சுட்டதில் உடலில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இன்னும் குண்டு சிதறல்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்து என்பதால் தலையில் இருக்கும் குண்டு சிதறலை இன்னும் எடுக்கவில்லை'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக