திங்கள், 25 ஜனவரி, 2010

வன்கொடுமை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, மேலக்கோவில்பட்டியைச் சேர்ந்த சடையாண்டி (24). இவர் தற்போது எர்ணாகுளத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வீட்டில் வெள்ளை அடிப்பதற்காக மேலக் கோவில்பட்டிக்கு வந்துள்ளார்.
இவர் தனது கிராமத்திற்கு சென்ற போது கால்களில் செருப்பு அணிந்து சென்றுள்ளார். இதனை அந்த ஊரில் உள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த 17 பேர் கொண்ட கும்பல், செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்று கூறி தாக்கியுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் ஏன் அணியக் கூடாது என்று கேட்டுள்ளார்.
இதனால் அந்த கும்பல் மேலும், சடையாண்டியத் தாக்கி, வலுக்கட்டயமாக மனித கழிவை அவரது வாயில் திணித்து கொடுமைப் படுத்தியுள்ளனர். மேலும், சாலையில் அவரை இழுத்துச் சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சிலர் அவரை வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சேர்துள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு சடையாண்டி புகார் அளிக்கும் முன்னதாகவே இவரை தாக்கியவர்கள் இவர் மீது புகார் அளித்துள்ளனர். போலீசார் இரு வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர். வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சடையாண்டி தேனி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவரை தாக்கியவர்கள் வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் உயிருக்கு பயந்து தேனியில் இருந்து தனது நண்பர் உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகஜோதி (20) என்ற மனைவியும் தீபிகா என்ற 3மாத குழந்தையும் உள்ள சடையாண்டி வன்கொடுமையாளர்களின் தாக்குதலுக்கு பயந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.
தமிழக அரசும், காவல்துறையும் தகுந்த பாதுகாப்பு அளித்து பாதிக்கப்பட்ட அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சடையாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக