திங்கள், 9 மார்ச், 2009

வன்னி மக்களை காப்பாற்றுங்கள் : உலக நாடுகளிடம் த.தே.கூ. கோரிக்கை

சிறிலங்க‌ப் படையினரின் கோர எறிகணை, பீரங்கித் தாக்குதல்களில் இருந்து உடனடியாக வன்னி மக்களை காப்பாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு உலக நாடுகளிடம் நான்கு கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 2,150 பேர் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 5,000 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 பேர் வரை கொல்லப்படுவதாகவும் கூட்டமைப்பின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதி தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10-15 தடவை இடம்பெயர்ந்து இருப்பிடம் இன்றி மர நிழல்களிலும் காடுகளுக்குள்ளும் வாழ்ந்து வருகின்றனர்.படையினரின் இடைவிடாத எறிகணை, பீரங்கித் தாக்குதல்களுக்கு அஞ்சி கடந்த இண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். 3,30,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், அரசு 70 ஆயிரம் மக்கள் மாத்திரமே வன்னிக்குள் இடம்பெயர்ந்திருப்பதாக கூறுகின்றது.அரசு பொய்ப் பிரசாரங்களை செய்து வருகின்றது. உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை என்றும் அமைச்சர்கள் கூறுகின்றனர். இங்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் எதுவும் இல்லாத நிலையில் அரசு உண்மைக்கு மாறான தகவல்களை கூறுகின்றது.புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளதாக கூறிய போதும் அவை ஒரு தனி நபருக்கு கூட போதுமானவை அல்ல. மிகவும் குறைந்தளவிலான பொருட்களே இங்கு அனுப்பப்படுகின்றன.வன்னியில் உள்ள மருத்துவமனைகள் எல்லாம் படையினரின் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன. மாத்தளன் மருத்துவமளை இயங்குகின்றது. அதுவும் சத்திர சிகிச்சை வசதிகள், வெளிநோயாளர் வசதிகள், மருந்துகள், மருத்துவர்கள் என எதுவு‌ம் இல்லாத நிலையில் இயங்குகின்றது.எந்தவித வசதிகளும் இன்றி தற்காலிகமாக புதுமாத்தளன் பகுதியில் மருத்துவமனை ஒன்று இயங்குகின்றது. அதனை நம்பித்தான் 3,30,000 மக்கள் வன்னியில் வாழ்கின்றனர்.ஆகவே, நான்கு கோரிக்கைகளை அனைத்துலக நாடுகளின் கவனத்திற்கு உடனடியாக முன்வைக்கின்றோம்.- மனித அவலங்களை தடுத்து மக்களை காப்பாற்றுவதற்கு அனைத்துலக நாடுகள் போரை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 3,30,000 மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். அத்துடன், மக்கள் தங்கியிருப்பதற்கான கூடாரங்கள் வழங்கப்பட வேண்டும்.- ஜக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர் குழுவும் மற்றும் அனைத்துலக மனித நேய அமைப்புக்களும் மக்களுடன் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.- பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு உள்ளுர், அனைத்துலக ஊடகங்கள் சென்று உண்மை நிலைமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இடமளிக்கப்பட வேண்டும்.ஆகிய நான்கு கோரிக்கைகள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.அனைத்துலக நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையானால் பெரும் மனித அவலங்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க தவறிவிட்டீர்கள் என்றுதான் கருத வேண்டிய நிலை ஏற்படும் என மிகவும் உருக்கமாக அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக