திங்கள், 18 மே, 2009

பிரபாகரன் உயிரிழப்பு ?



யுத்ததாண்டவம் முடிவுக்கு வந்துள்ளதா? புலிகளின் முக்கியஸ்த்தர்கள் பலர் கொல்லப்பட்டனரா? இறுதியாகக் கிடைத்த தகவல்கள்:


விடுதலைப் புலிகளிடம் எஞ்சியிருந்த சிறு நிலப்பரப்பும் முழுமையாக கைப்பற்றப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பாரிய மரண ஓலங்களின் மத்தியில் இன்று அதிகாலை ஆரம்பித்த கனரக ஆயுதத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் மரணித்து காயமடைந்த நிலையில் மரணிக்காது சிகிச்சை பெற்று வந்த மக்கள் மற்றும் 300ற்கு மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு தகவலும் மற்றொரு தகவல் காயப்பட்ட புலிகளின் உறுப்பினர்கள் சையனைட் உட்கொண்டு மரணித்ததாக ஒரு தகவலும் தெரிவிக்கின்றது.

நேற்றிரவு ஐரோப்பிய நேரம் 11.30ற்கு இலங்கை நேரம் 3.00 மணிக்கு விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித் தேவனும் அரசியற் துறைப் பொறுப்பாளர் பா. நடேசனும் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் ஆயிரம் வரையிலான காயமடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், சிவில் அலுவலர்கள், மற்றும் மக்கள் இருப்பதாகவும் அவர்களை மீட்குமாறும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதேவேளை சில சர்வதேச சக்திகளின் ஆலோசனையின் பேரில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் சரணடைவதற்கு தயாராக இருந்ததாகவும் எனினும் படையினர் அவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அரசியற் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் புலித்தேவன், ஆகியோர் கொல்லப்பட்டு இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன் உள்ளிருந்து இறுதியாக சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு வெளியேற முற்பட்டவர்களில் கேணல் றமேசும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதற்கிடையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தாம் கொன்றுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளதாகவும் அவரது சடலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஆங்கில தொலைக்காட்சி செய்தி சேவை ஒன்று விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் அதன் பின்னர் புலிகளின் தலைவரின் உயிரிழப்பு தொடர்பாக முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியாகியுளள்தாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்த்தர்களான பா.நடேசன், புலித்தேவன், ரமேஸ், இளங்கோ, ஆகியோரின் சடலங்கள் எனக்கூறி இலங்கையின் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி உடனடிச் செய்திகளையும் காட்சிகளையும் ஒளிப்பரப்பி வருவதாகவும் ஆனால் மேற்கூறியவர்களின் சடலங்களுக்குரிய அடையாளங்கள் அதில் காணப்படவில்லை எனவும் எரியூண்ட சடலங்களின் காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்றனி என சொல்லப்படும் ஒரு சடலமும் தொலைக்காட்சியில் காட்டப்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்று தென்னிலங்கையில் வெளியான பிரதான சி;ங்கள பத்திரிகை ஒன்று, புலிகளின் தளபதிகளான ரமேஸ், லோரன்ஸ் மற்றும் கரிகாலன் ஆகியோர் நேற்றிரவு தமது குடும்பங்களுடன் படையினரிடம் சரணடைந்தனர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆனால் ரமேஸ் கொல்லப்பட்டதாக இன்று பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

இதேவேளை கொழும்பில் தமிழர்கள் சில சிங்களவர்களினால் அவமதிக்கும் பார்வையில் நோக்கப்படுவதாகவும் தமிழர்கள் தமிழில் உரையாற்றவும் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடும் பகுதிகளில் குறிப்பாக பெருபான்மையான தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கொழும்பு செட்டியார்த் தெரு உள்ள பிரதேசங்களில் இலங்கை தேசியக் கொடிகளை விற்பனை செய்து வரும் காட்சிகளை சர்வதேச தொலைக்காட்சி ஒன்று ஒளிப்பரப்பியதை காணக்கூடியதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக